சென்னை: மாதவரம் கில்பன் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "சென்னை கௌரிவாக்கத்தில் வசித்து வரக்கூடிய ராஜேஷ் ரகுராம் 2020ஆம் ஆண்டு என்னுடைய கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார்.
அதில் கடலோர காவல் படையில் பணியில் சேர்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்துவதாகவும், பயிற்சி முடித்தவுடன் மத்திய அரசின் கடலோர காவல் படையில் பணி வாங்கித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்கு ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி ராஜேஷ் ரகுராமின் நண்பரான சொர்ண செந்தில் என்பவருக்குப் பணத்தை அனுப்பினேன். பின்னர் பயிற்சி வகுப்பை முடித்தவுடன் பணி நியமன ஆணை ஒன்றை அனுப்பினர். இந்த ஆணையைக் கொண்டுசென்று விசாரித்தபோது அவை போலி எனத் தெரியவந்தது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட வடபழனியைச் சேர்ந்த ஹேமலதா (48), ஓ.எம்.ஆரை சேர்ந்த சொர்ண செந்தில் (34), ஒட்டியம் பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரகுராம் (40) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
கடலோர காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக இவர் 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஐந்து கோடி ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது