சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் கேட் அருகே நேற்று முன்தினம் அத்துமீறி டிரோன் ஒன்று பறந்தது. இதனை கண்ட நீதிமன்ற பாதுகாப்பு போலீசார் உடனடியாக டிரோனை பறக்கவிட்ட மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் டிரோனை பறக்கவிட்ட நபர்கள் திருவல்லிக்கேணியை சேர்ந்த வித்யா சாகர் (27), விக்னேஷ்வரன் (30) மற்றும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சூர்யா (30) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் தனியார் நிறுவனம் சார்பாக நடத்த உள்ள நிகழ்ச்சி தொடர்பாக என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் ஆர்மேனியன் தெரு சந்திப்பை டிரோன் மூலமாக படம்பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அத்துமீறி உயர்நீதிமன்றம் வளாகம் அருகே படப்பிடிப்பை நடத்திய மூவர் மீதும், அத்துமீறி டிரோன் பறக்கவிடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து டிரோன், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
ஏற்கனவே சென்னையில் அரசு அலுவலகங்கள், உயர்நீதிமன்றம், ரயில் நிலையங்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் அனுமதி பெறாமல் டிரோன் மற்றும் இதர கருவிகளை பறக்கவிடுவோர் கைது செய்யப்பட்டு, கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!