சென்னை: கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹிஜாவு நிதி நிறுவனத்தில் 15 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு, பணம் கட்டி ஏமாற்றமடைந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது சுமார் 10,000 மேற்பட்ட நபர்களை ஹிஜாவு நிதி நிறுவன உரிமையாளர்கள் ஏமாற்றி உள்ளனர் என்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக ஹிஜாவு நிதி நிறுவன குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் உட்பட 21 நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் முதலில் நேரு என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து குரு, மணிகண்டன், முகமது ஷெரிப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி சுமார் 1500 நபர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையான ரூ.500 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின் படி தற்போது திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி பாலமுருகன், அண்ணா நகரைச் சேர்ந்த சுஜாதா பாலாஜி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி ஆகிய 3 பெண்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை 2835 நபர்களிடமிருந்து ரூ.235 கோடி மோசடி செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து ஏமாற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்துள்ள நபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 21 நபர்களில் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மீதமுள்ள 15 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ஏமாற்றப்பட்ட தொகையின் மதிப்பானது பல மடங்கு உயரலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் hijaueowdsp@gmail.com என்ற இமெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கேம் மோகம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சித்தப்பா மகன் கைது!