தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975இன் கீழ் பதிவு செய்யப்படும் சங்கங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தை அவசியம் கூட்ட வேண்டும். சங்கத்தின் நிதியாண்டு முடிந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம், சங்கத் தேர்தலை நடத்த இயலாத நிலை உள்ளதாக தெரிவித்து, இணைய வழியில் (Online) நடத்த அனுமதி வழங்கக் கோரி சில சங்கங்களிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டது.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 பிரிவுகள் 15(3) மற்றும் 26இன் படி பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் இணையதளம் (Online) மூலம் பொதுக்குழு கூட்டம், தேர்தல் நடத்த அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கரோனா தொற்று பரவி வரும் நிலையை கருத்தில் கொண்டே செப்டம்பர் 2020க்குள் கூட்டப்படவேண்டிய பொதுக்குழு கூட்டத்திற்கான கால அவகாசம் டிசம்பர் 2020 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசாணையை வணிகவரி, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இக்கால நீட்டிப்பை சங்கங்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என பதிவுத் துறைத்தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.