சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே இன்று (ஜூன் 15) காலை மூன்று பேர் குடும்பத்துடன் வந்து திடீரென்று தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர்.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அந்த குடும்பம் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் வசித்துவருவது தெரியவந்தது. அதில் ஒருவர் பாக்யராஜ் (35) என்பதும், உடனிருந்தது அவருடைய அக்கா அம்பிகா என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர் ஆலப்பாக்கத்தில் சொந்த வீட்டில் வசித்து வருவதும், இவரது வீட்டிற்கு அருகே வசித்து வரக்கூடிய உறவினர்களான தாஸ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து அடைத்துள்ளதும் விசாரணையில் அறியவந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்தால் மிரட்டுவதாகவும், இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இங்கு வந்து தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அக்குடும்பத்தினரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காசி வழக்கு: 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி!