சென்னை: நேற்றிரவு (அக்.24) ராயலா நகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவல் துணை ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோரின் தலைமையில், வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், அரசமரம் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது.
இதில் அவ்வழியே சென்ற வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது வேனில் வந்த மூன்று பேரும் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது, வேனில் தடை செய்யப்பட்ட குட்கா அதிக அளவில் இருப்பதை கண்ட காவல்துறையினர், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அதில், பிடிபட்டவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த ஜெபர்சன் (24), மாரீஸ்வரன் (39), முருகன் (29) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரிடமும் விசாரித்தபோது, இவர்கள் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை வாங்கி வந்து நங்கநல்லூரில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 318 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஒரு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே குட்கா வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வேறு எங்கெல்லாம் குட்கா பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்தும், எந்த எந்த பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது குறித்தும், காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலை கடத்தல் விவகாரம்; மேலும் ஒரு சிலை மீட்பு!