சென்னை, பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக வேப்பேரி காவல் நலையத்தில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து உதவி ஆணையர் மகேஷ்வரி தலைமையிலான காவல் துறையினர் இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரிக்கத் தொடங்கினர்.
விசாரணையில் மூன்று பேர் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் கடந்த ஒரு வருடமாக காவல் துறையினரிடம் சிக்காமல் மூவரும் தப்பித்துவந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு புரசைவாக்கத்தை அடுத்த டவுட்டன் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருட முயன்றபோது அம்மூவரையும் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மூவரும் திருமழிசையைச் சேர்ந்த தமிழ்வாணன், அம்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல், கள்ளிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த இரண்டு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்களை திருடி பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வேப்பேரி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் பயங்கரம்: காவலர்கள் வேடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை