சென்னை: கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல இடங்களில் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையிலிருந்து ஒரு குழுவினர், ஆந்திராவுக்குச் சென்று கஞ்சா வாங்குவதாக துணை ஆணையர் சிவபிரசாத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி இணை ஆணையர் துரைகுமார் உத்தரவிட்டார்.
துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடிப்பு
இதனைத் தொடர்ந்து கஞ்சா வாங்கச் செல்லும் வியாபாரிகளை பின்தொடர்ந்து, துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் ஆந்திரா சென்றனர்.
இந்த கஞ்சா விற்பனை கும்பல் ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை வாங்கிக் கொண்டு, நாயுடு பேட்டை அருகே சொகுசுக் கார்களில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உதவி ஆய்வாளர் விஜய் தலைமையிலான தனிப்படையினர் துப்பாக்கி முனையில் சொகுசுக் கார்களை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கார்களில் நடத்தப்பட்ட சோதனையில், காரின் பின் பக்கம் கஞ்சா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து காவலர்கள், காரில் வந்தவர்களை திருவொற்றியூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கத் தொடங்கினர்.
120 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
இந்த விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட முதல் தரம்வாய்ந்த கஞ்சாவை, சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து சுமார் 60 லட்சம் மதிப்புள்ள, 120 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இக்கடத்தல் தொடர்பாக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தோஷ், ரங்கோலி ராஜேஷ் ரெட்டி, சிவபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிடிபட்டவர்கள் எங்கு கஞ்சா வாங்கினார்கள், யாரிடம் விற்பனைக்கு கொடுக்க இருந்தனர் என பல கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் வழியாக ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர் கைது