சென்னை பூந்தமல்லி திருமழிசையைச் சேர்ந்தவர் கமலாதேவி, இவர் கடந்த 23ஆம் தேதி துபாயில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தார். அப்போது, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்றபோது அவரது ஒரு பையை தவறவிட்டதாகவும் அதில் இரண்டு செல்ஃபோன்கள், நில ஆவணங்கள் இருந்ததாகவும் விமான நிலைய காவலரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து, விமான நிலைய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விமான நிலைய கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது மூன்று பேர் கமலாதேவியின் பை இருந்த டிராலியை தள்ளிச் சென்றது பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் பையைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து டாக்சி ஓட்டுநர் பாலாஜி(58), துரைசாமி (55),ராஜேஷ்(35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 செல்ஃபோன்கள், நில ஆவணங்களைக் கைப்பற்றி, மேலும் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.