சென்னை: நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச்சேர்ந்தவர் ரவுடி குள்ள குமார் (23). சி கேட்டகரி ரவுடியான இவர் மீது ஏற்கெனவே நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு (ஆக.16) ரவுடி குள்ள குமார் நுங்கம்பாக்கம் டேங்க் பண்ட் சாலையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் குள்ள குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர், தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குள்ள குமாரை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதற்கிடையில் குள்ள குமாரை வெட்டிய நுங்கம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த தனசேகர் என்ற சாம்பார் (25), மதுரவாயல் பகுதியைச்சேர்ந்த ராஜா (33) மற்றும் துரைப்பாக்கம் பகுதியைச்சேர்ந்த சங்கு என்ற பார்த்திபன் (30) ஆகியோர் சூளைமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பின்னர் சூளைமேடு காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற நுங்கம்பாக்கம் காவல் துறையினர், 3 பேரையும் கைது செய்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய பழைய குற்றவாளியான தனசேகர் என்ற சாம்பார் காவல் துறை இன்ஃபார்மராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 9ஆம் தேதி தனசேகரை வழிமறித்த குள்ள குமார் காவல் துறைக்கு ஏன் தகவல் கொடுக்கிறாய் எனத் தகாத வார்த்தைகளில் திட்டி, தனசேகரை கத்தியால் வெட்டியதாகவும்; அதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் பழிக்குப்பழிவாங்க திட்டமிட்டு குள்ள குமாரை வெட்டியதாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குள்ள குமார் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் கொலை உள்ளிட்டப் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதியில் ராணுவ வீரர் தற்கொலை