சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நெற்குன்றத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 8 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை, மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தையும் கடிகாரத்தையும் பறித்துகொண்டனர்.
அத்தோடு மட்டுமல்லாது செல்போனைப் பறித்து அதில் உள்ள கூகுள் பே செயலி மூலம் 2000 ரூபாய் பணத்தையும் அவர்களது நண்பரின் கூகுள் பே செயலிக்குப் பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜா, தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
வழிப்பறிக் கொள்ளையர்களின் கூகுள் பே கணக்கில் உள்ள தொலைபேசி எண்ணை வைத்து ஆய்வுசெய்த காவல் துறையினர், அதன்மூலம் பாலமுருகன், விக்கி சந்தோஷ்குமார், பிரகாஷ், கார்த்திக், தினேஷ் அருணாச்சலம், ஏழுமலை ஆகிய எட்டு பேரை கைதுசெய்து அவர்களிடமிருந்து ராஜாவின் கடிகாரத்தையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு பணப்பரிவர்த்தனை செயலி மூலம் மிரட்டி பணத்தைப் பறித்தால், உடனடியாக அருகில் உள்ள சைபர் காவல் நிலையங்களை அணுகி, பரிவர்த்தனையைத் தடுக்கலாம் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.