தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு சவால்களை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2021 பிப்ரவரி 23ஆம் தேதி வரை 500-க்கும் குறைவாக இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை, தற்பொழுது இரண்டாயிரத்திற்கும் மேல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டத்தை நடத்துபவர்கள் அதனை உறுதிசெய்ய வேண்டும், கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும் அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், பாதுகாப்பு அலுவலர்கள் அவற்றை உறுதிசெய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதனை அரசியல் கட்சியினர் மறந்து கூட்டத்தைக் கூட்டுகின்றனர். இதனால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2020 மார்ச் 24ஆம் தேதி கரோனா பரவல் காரணமாக, முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளும் செலவிட்ட கோடிக்கணக்கான பணமும் வீணாகிவிட்டதாகவே கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு பொதுமக்களின் அச்சமின்மை, சுகாதாரத் துறையின் அலட்சியப்போக்கு மட்டும் காரணம் அல்லாமல், அரசியல் கட்சியினரின் பரப்புரையும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கிராம சபை கூட்டம், ஊர் கூட்டம், கட்சிக் கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் உள்ளிட்டவை தொடங்கிவிட்டன. கூட்டமாக மக்களைக் கூட்டிவந்து, கட்சிக் கொடியையும், சின்னம் போட்ட தொப்பியையும் கொடுத்து அமரவைத்தனர் அரசியல் கட்சியினர். ஆனால் அவர்களுக்கு முகக்கவசம் கொடுக்கவில்லை.
அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பரப்புரை நடைபெற்றுவருகிறது. ஆங்காங்கே தொண்டர்கள் கூட்டமாகச் செல்வதும், தெருமுனைகளில் நின்று பேசும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எந்தவிதமான வழக்குகளையும் பதிவுசெய்யாமல் உள்ளனர். அதே நேரத்தில் கரோனா தொற்றுப் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்காக சுமார் 60 ஆயிரம் படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனாவை கண்காணிக்க உயர் அலுவலர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியைச் செலுத்துவதற்கும் தீவிரமாகப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவை அனைத்தும் பயன் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினரின் பரப்புரை உள்ளது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் கூறும்போது, "கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்குக் காரணம் பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்றவை ஆகும். தேர்தல் ஆணையம் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
அதேபோல் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினரும் தங்களின் தொண்டர்களுக்கு கரோனா தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறும்போது, "கரோனா தொற்று கடந்த ஆண்டு வேகமாகப் பரவியபோது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு கட்டுப்படுத்தியது. ஆனால் தீபாவளி மாதத்திற்குப் பின்னர் அரசு கண்காணிப்பு நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டது.
தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை காலங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருக்கத் தொடங்கினர். இதுபோன்ற செயல்களால் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. வெளிநாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆறு மாதங்கள் கடந்துதான் ஆரம்பித்தது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவிட்டது எனக் காண்பிப்பதற்காகப் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தற்பொழுது கரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. இந்த முறை பள்ளி, கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. அரசும் தற்பொழுது கண்காணிப்புப் பணிகளில் மிகவும் மெத்தனமாக இருந்துவருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நேரம் என்பதால் தொண்டர்கள் அதிகளவில் கூடுகின்றனர். அங்கு அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். அரசியல் கட்சியினர் தொண்டர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அரசியல் கட்சிகள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். கரோனா அதிகளவில் பரவும்போது மருத்துவமனைகளில் இடங்கள் இல்லாத நிலை ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா 2ஆவது அலை: தமிழ்நாட்டில் தீவிர தேர்தல் பரப்புரை