சென்னை: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர், மின்கட்டண உயர்வை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை (செப்.25) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கு தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வேர் கூட்டமைப்பு, கோவை சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்கம், தொழில்நிறுவன மின் நுகர்வோர் கூட்டமைப்பு, இந்திய தொழில் முனைவோர் சங்கம், எய்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்பினர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் தொழில் பாதிக்கப்பட்டதோடு, பல கோடி ரூபாய் பணம் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து, தமிழ்நாடு தொழில் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தது, "தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட அராசாணையில், எங்களது கோரிக்கைகள் நியாயமாக நிறைவேற்றப் படவில்லை. மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என கூறி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன் படி சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களை சேர்ந்த சுமார் 35 லட்சத்திற்க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது" என தெரிவித்தனர்.
மேலும், இன்று நடந்த மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக, தமிழகம் முழுவதும் 1,200 கோடி மதிப்பிலும், சென்னையில் மட்டும் 350 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Bengaluru Bandh: தமிழக லாரிகள் நாளை கர்நாடகாவுக்கு செல்ல வேண்டாம்: தனராஜ் அறிவிப்பு!