மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.27) திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை, எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடக்கப் பணிகளை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம், அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி, நீர்தடாகங்கள் போன்ற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட கட்டடக்கலை நிபுணர்கள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆலோசனைப்படி நடைபெற்றது. ஜெயலிதாவின் நினைவிடத்தை விரைந்து முடிக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை அரசு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நியமனம் செய்தது. அப்போது மூன்று மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டது.
சென்னையில் பலத்த பாதுகாப்பு
அதிமுக தொண்டர்கள் வருகையையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும்வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் வரும் வாகனத்தை கலைவாணர் அரங்கம் மற்றும் தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15,000 மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று பரவும் அபாயம்
மெரினா கடற்கரையில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளதால், கரோனா பரவும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மதுரைக்காரன் பாசக்காரன்: ஜெ.நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு தனி ரயிலில் தொண்டர்களை அழைத்துச் சென்ற அமைச்சர்