கரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும், தினக்கூலிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, 2 ஆயிரத்து 187 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் சென்று சேர்வதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆயிரம் ரூபாயை பெற விருப்பமில்லாதவர்கள் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் பதிவு செய்து, அதனை வாங்காமல் தவிர்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தில் நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, ஆயிரம் ரூபாயை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் மதுரையில் ஒருவர் உயிரிழப்பு! அதன் பின்னணி என்ன?