சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மார்ச்.7) மீண்டும் விசாரணையைத் தொடங்கியது.
முன்னதாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய, சிகிச்சையின்போது உடனிருந்த அப்போலோ மருத்துவர்கள் 10 பேர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
பதவியேற்புக்கு முன்னதாகவே உடல் நலக்குறைவு
அதன்படி முதல்நாள் விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது மருத்துவர் பாபு மனோகர் கூறுகையில், "2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக அவருக்கு தலைசுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்கமுடியாத சூழல் ஆகியப் பிரச்னைகள் இருந்தன.
மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முதல்நாள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்து, பரிசோதனை செய்தேன். அவருக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறும் பரிந்துரைத்தேன். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாகக்கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்" என விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான கரோனா பாதிப்பு