சென்னை: அமமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (மார்ச் 8) தொடங்கியுள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நேர்காணலில் 18 மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றுவருகின்றனர். எஞ்சிய மாவட்டத்தினருக்கு நாளை (மார்ச் 9) நேர்காணல் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், "இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். உண்மையான தர்மயுத்தம் இப்போது தான் தொடங்குகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவருவோம். அனைவரும் வெற்றிக்காக பாடுபட வேண்டும். நாங்கள் அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க மாட்டோம். ஜெயலலிதா மீது விசுவாசம் உள்ளவர்கள் அமமுகவுக்கே வாக்களிப்பர்" என்று கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓரிரு நாளில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளேன். யாருடன் பேசுகிறோம் என்பதையெல்லாம் வெளிப்படையாகக் கூற முடியாது
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி என்பது தவறான தகவல். எங்கள் பக்கம் உள்ள நிர்வாகிகளுக்கு அதிமுகவில் சீட் தருவதாகக் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’அதிக தொகுதிகள் திமுக தரும் என எதிர்பார்த்தோம்; பரவாயில்லை’