தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையுடன் செப்டம்பர் முதல் வாரத்தில் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் செங்கொடி சங்கம் ஈடுபட்டது.
இதுதொடர்பாக மண்டல நிர்வாகிகள் குற்றச்சாட்டு குறிப்பாணை, நிரந்தர தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள் 291 பேர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளனர் என செங்கொடி சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென இன்று (செப்.22) சென்னை சேப்பாக்கதில் சவுந்தரராஜன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தரராஜன் (CITU) "இந்த கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களை பாராட்டி கைதட்ட, விளக்குப்பிடிக்க சொன்ன அரசு, அவர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றி வருகிறது. சம்பளம் சரியாக வழங்கவில்லை 500 ரூபாய் தரவேண்டும் என செங்கொடி சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மற்ற நகரத்தில் வழங்கப்படும் கூலியை விட இது குறைவு, இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்திய நான்கு நிரந்தர பணியாளர்கள் இடைநீக்கம், 371 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை கொண்டாட வேண்டிய நேரத்தில் ஏன் அரசு திண்டாட வைக்கிறது? எனவே அரசு மற்றும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசவேண்டும். அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதி கூடாது - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்