சென்னை : தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் சிலர் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் இருப்பதால் சில இடங்களில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், மருத்துவ வல்லுனர்கள் உடன் கலந்து ஆலோசித்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன.மேலும் மாணவர்களின் நலன்கருதி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள்,ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிக்கு நுழையும்போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
- உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- அனைவரும் முகக் கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து ஆசிரியர்களும் முகக் கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
- தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளி நேரங்களில் கூட்டணி சேராமல் போதிய இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
- பள்ளிக்கு தொடர்பில்லாதவர்கள் பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க வேண்டாம். இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கால்நடை மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!