சென்னை: திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட திமுக- விசிக இடையே உடன்படிக்கை ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், "தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் சனாதன சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய யுத்தகளமாக இந்தத் தேர்தல் உள்ளது. புதுவையைப் போல் தமிழ்நாட்டிலும் தில்லு முல்லு வேலைகளைச் செய்ய வேண்டும் என பாஜக முயற்சித்துவருகிறது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழித்து சமூக நீதியை அழிக்க வேண்டும் என பாஜக செயல்பட்டுவருகிறது. விசிக உயர்நிலை குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் இந்தக் கூட்டணி உடன்பாடு வேண்டாம் எனத் தெரிவித்தனர். இருப்பினும், தமிழ்நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டும், சனாதனத்திற்கு எதிரான வாக்குகள் விடுதலைச் சிறுத்தைகளால் சிதறக்கூடாது என்ற கொள்கை முடிவில் உடன்படிக்கை ஏற்பட்டது.
ஆறு தொகுதிகளிலும் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும். அண்ணா, பெரியார், கருணாநிதி கட்டிக்காத்த சமூக நீதியைக் காக்க வேண்டிய தேவை உள்ளது. திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். சசிகலா அரசியலைவிட்டு விலகுவதாகத் தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற முடிவா அல்லது பாஜக அச்சுறுத்தல் கொடுத்தா? என்று தெரியவில்லை. அதிமுக - அமமுக இணைய வேண்டும் என்பதை சசிகலா அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதிமுக வெற்றிபெற்றால் பாஜக வெற்றிபெறுகிறது. அதிமுக, பாமக, பாஜக தங்கள் நலன்களை முன்னிறுத்தி சமூக நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கட்சிகள்" என்றார்.
இதையும் படிங்க: தொகுதிப்பங்கீட்டில் இழுபறி: கறார்காட்டும் 'பெரிய அண்ணன் திமுக'