சென்னை:கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இப்படத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இயக்குநர் ராசி அழகப்பன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி, இயக்குநர் விருமாண்டி, நடிகர்கள் முத்துக்காளை, நடிகர் கூல் சுரேஷ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன?: தயாரிப்பாளர் கே. ராஜன் கூறுகையில், ‘இப்ப கூட என்ன வெளியில் பேட்டி எடுத்தார்கள். அரை மணி நேரம் எடுத்த பேட்டியில், பீஸ்ட் படம் பற்றி என் கிட்ட கேக்குறாங்க. பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன, ஓடலைனா எனக்கென்ன. என் கிட்ட பீஸ்ட்...பீஸ்ட்...என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை. காரணம், நான் விஜய் கிட்டத் தேதி கேட்டு நிக்க போறதல்ல. பணம் கேட்டு நிற்க போறதில்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “காதல் சுகுமார் எனக்கு சுமார் 25 ஆண்டு காலமாகத் தெரியும். அப்போதே அவர் எனக்கு நடிப்பில் பல டிப்ஸ்களை கொடுப்பார். எப்படிப் பேச வேண்டும். இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று ஐடியா கொடுப்பார். அப்போதே நான் அவர் பின்னாடி ஒளி வட்டம் தெரிவதை உணர்ந்தேன். அவர் உள்ளே ஒரு இயக்குநர் இருப்பதையும் உணர்ந்தேன்.
பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக்கேட்ட கூல் சுரேஷ்: அதனால் தான் படங்களையும் இயக்கியுள்ளார். நிச்சயம் இந்தப் படம் மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் படமும் நல்ல வெற்றியைப் பெற வேண்டும்.” என்று பேசியவர், திடீரென்று மேடையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால், பத்திரிகையாளர் கோபமடைந்து கூல் சுரேஷை எச்சரித்தனர்.
உடனே, தனது தவறை உணர்ந்த நடிகர் கூல் சுரேஷ், 'நான் இப்படிப் பேசினால் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். ஆனால், இனி இப்படிப் பேச மாட்டேன்' என்று கூறி மன்னிப்புக்கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட தயாரிப்பாளர் கே.ராஜன் , 'பொதுமேடையில் இப்படி அநாகரிகமாகப் பேசக்கூடாது. தம்பி உணர்ச்சிவசப்பட்டுப்பேசிவிட்டார். இனி அப்படிப் பேசமாட்டார். வண்ணாரப்பேட்டைக்காரன் தான் நான். எனக்கும் இப்படிப் பேசத்தெரியும். ஆனால், பொது இடத்தில் அப்படிப் பேசமாட்டேன்.
இதே ஒரு பொறுக்கியிடம் பேச வேண்டிய சூழலில் இப்படித்தான் பேசுவேன். இனி, அவர் இப்படிப் பேச மாட்டார். அவரை மன்னித்துவிடுங்கள்’ என்று பேசிய அனைவரையும் சமாதானப்படுத்தினார். பிறகு இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கே.ராஜன் வெளியிட, வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.
இதையும் படிங்க:பரியேறும் பெருமாள் தந்தையை பரியேற்றிய மாவட்ட ஆட்சியர்