சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த ராமமூர்த்தியின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அவரது திருவுடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 156 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அந்த ஆண்டு உடலுறுப்பு தானம் செய்ததில் இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சார்பில் சிறந்த மாநில விருது (BEST STATE AWARD) வழங்கப்பட்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு மூன்று மாதத்தில் மட்டும் 61 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.
அதற்கு முன்னால் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் 117 பேர் என மொத்தம் 178 பேர் செய்திருக்கிறார்கள். ஆகையால் 2023ஆம் ஆண்டிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக உடலுறுப்பு தானம் செய்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4% அதிகரித்திருக்கிறது.
3,958 பேர் தங்களுடைய மறைவிற்குப் பின்னால் உடலுறுப்பு தானம் செய்வோம் என்று பதிவு செய்திருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டு தொடங்கி 13 நாட்கள் நிறைவு பெற்றிருக்கும் இந்நாளில் ராமமூர்த்தி சேர்த்து 11 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். இப்படி உடலுறுப்பு தானம் செய்துவரும் நிலையில், உடலுறுப்பு வேண்டிக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.
சிறுநீரகம் வேண்டிக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 6,322 பேர், கல்லீரல் 438, இதயம் 76, நுரையீரல் 64, இதயமும் நுரையீரலும் வேண்டிக் காத்திருப்பவர்கள் 25, கைகள் வேண்டிக் காத்திருப்பவர்கள் 27, சிறுகுடல் 2, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 40, சிறுநீரகம் மற்றும் கணையம் 42, கணையம், சிறுகுடல், வயிறு 1 என மொத்தம் 7,031 பேர் உடலுறுப்பு தானம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். மேலும் கடந்த ஆண்டு 178 உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு 1,000 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ராமமூர்த்தியின் உறுப்புகள் 7 பேருக்கு பயன்பெற்றிருக்கிறது. கல்லீரல் ரேலா மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும், ஒரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், இன்னொரு சிறுநீரகம் அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கும், இதயம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பயன்பெற்றிருக்கிறது. இவர் இறந்தும் இன்று ஏழு பேரிடத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்..!