சென்னை: சென்னையில் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்க ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால் வரும் 6ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளார். அவரது வருகையை தடைசெய்ய வேண்டுமெனகோரி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று (ஜூலை 27) சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, “தூத்துக்குடி மக்களைப் பாதிக்கும் வகையில் நச்சுக்காற்றை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஸ்டெர்லைட் நிறுவனம் உருவாக்கியது. இதனால் இந்த நிறுவனத்தை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு காரணமாக இருந்ததை தமிழ்நாடு அரசும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடினர்.
2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். அந்த படுகொலையை மக்கள் இன்னும் மறக்கவில்லை, இதற்கு இந்நிறுவனம் தான் முக்கிய காரணம். அதனால் வேதாந்தா குழுமத்தின் மீது தமிழர்கள் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். வருடந்தோறும் மக்கள் இதனை நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்தப் படுகொலைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர் அனில் அகர்வால் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அனில் அகர்வால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் மனிதவிரோதச் செயல்களை செய்தவர். ஆப்பிரிக்காவில் அவர் இயக்கிய நிறுவனம் பல கேடுகளை உருவாக்கியுள்ளது. அதேபோன்று இங்கிலாந்து உயர் நீதிமன்றமும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. இப்படி பல குற்றப் பின்னணியில் உள்ள நபர் சென்னையில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமில்லாமல், கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
ஆகவே, ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் சென்னைக்கு வருவதை தடை செய்வதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். மேலும், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக இருக்கிறது. ஆகவே தமிழக அரசு அனில் அகர்வால் தமிழ்நாடு வருவதை தடை செய்யும் என நம்புகிறோம். தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பை மீறி அவர் வருகை தர மாட்டார். அப்படி வருகை தரும்பட்சத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்” என காட்டம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு - சிபிஐ விசாரணை!