மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உலுக்கிய சுஜித்தின் போராட்டம் துயரமான முடிவை எட்டியுள்ளது. தமிழ்நாட்டினுடைய குழந்தைகளை ஆழ்துளைக் கிணறுகள் தொடர்ந்து பழிவாங்கிவருகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் வரையறைகளை வகுத்துள்ளது. ஆனால் இந்த வரையறைகள் எதுவும் இதுவரை அரசினால் பின்பற்றப்படவில்லை. அரசு செயல்படுவதைப்போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.
குழந்தையை மீட்க அரசிடம் அறிவியல் பூர்வமான வேலைத்திட்டம் இல்லை. சுஜித்துக்கு நிகழ்ந்தது வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தால் மீட்பது குறித்து தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுக்களுக்கு தேவையான நவீன கருவிகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான அரசியல் பூர்வமான அணுகுமுறை இல்லை.
நிலத்தின் பல்லாயிரம் அடிக்கு கீழ் இருக்கும் கனிமங்களைக் கண்டுபிடிப்பதற்கு அரசிடம் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் 50 அடியிலிருக்கும் குழந்தையை மீட்பதற்கு அரசிடம் கருவி இல்லை. அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் அங்குபோய் அமர்வதால் குழந்தையை மீட்க முடியாது.
சுஜித் விவகாரத்தில் இந்திய அரசிடம் எந்தப் பதற்றமும் இல்லை. பல நாட்டுத் தலைவர்களுடன் தொடர்புவைத்துள்ள பாரதப் பிரதமர், அந்தத் தலைவர்களிடம் பேசி உதவி கேட்பதை விட்டுவிட்டு சுஜித்துக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறுகிறார். மத்திய, மாநில அரசின் ஒருங்கிணைந்த தோல்வியே சுஜித்தின் மரணம்.
அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. தொற்று நோய்கள் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடிவருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சாவர்க்கருக்கு பாரத ரத்னா... விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை...!'