நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19ஆம் தேதி ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு இதுதொடர்பாக கடிதத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்து கணிப்புகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. 1983ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து விவாதிக்கவும் செய்துளது. இதனைத்தொடர்ந்து 1999ஆம் ஆண்டு சட்ட அறிக்கையில் ஒரு நாடு ஒரே தேர்தல் குறித்து பேசப்பட்டது.
தற்போது மத்திய அரசு இதுகுறித்து தீவீரம் காட்டி வரும் நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவையும், நேரத்தையும் குறைக்க வழிவகை செய்கிறது. தேர்தல் நடத்துவதற்கே நாட்டில் பாதி செலவாகிறது என்றார்.