சமூகத்தில் அனைவரும் சமமாக வாழ வேண்டுமென்பதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டவர் தந்தை பெரியார். அவரது 143ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.
மேலும் அவரது பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுமென சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் பெரியார் பிறந்தநாளன்று உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், #சமூகநீதிநாள்_உறுதிமொழி ஒருவர் சொல்ல மற்ற அனைவரும் திரும்பச் சொல்லி உறுதியேற்க வேண்டும். பெரியார் சிலைகள் இல்லாத பகுதிகளில் அவரது படம் வைத்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் - “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியால் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.
- சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
- சமத்துவம், சகோதரத்துவ, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்.
- மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என உறுதிமொழி வாசகங்களையும் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் முன்பு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதியேற்க இருக்கிறார்.