இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கண்டித்தும், அவரை இந்தியாவிற்கு அழைத்த பாஜக அரசைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், "இலங்கையில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இணைந்து இனப்படுகொலை செய்தன.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, பயங்கரவாதிகள் பட்டியலில் அல் கொய்தா போன்ற அமைப்புகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பையும் சேர்த்தது. அதுவே, தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இனப்படுகொலையில் ஈடுபட்ட கோத்தபயாவை இந்தியப் பிரதமர் ஏன் முந்திக்கொண்டு இந்தியாவிற்கு அழைத்து வாழ்த்துக் கூற வேண்டும்.
தமிழர்களின் உணர்வை மதித்து மோடி இதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இந்துக்களுக்கு எதிராக நான் பேசுவதாக தற்போது வதந்தி பரப்பக் காரணம், திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்குத்தான்.
முதலமைச்சரை நான் சென்று பார்த்தது, இது மூன்றாவது முறை. அவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கத்தான் சென்றேன். இது தவிர வேறு ஒன்றுமில்லை. இதை வைத்து நான் கூட்டணி மாறப்போவதாக அரசியல் செய்கின்றனர்" என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார்.