கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில், 87 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுகவைச் சேர்ந்த முருகுமாறன் (48,450 வாக்குகள்) வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் (48,363 வாக்குகள்) தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை, இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அலுவலர் விஜயராகவனை அந்தத் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததையொட்டி, நீதிமன்றத்தில் ஆஜரான விஜயராகவன், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளைப் பிரித்து, அவ்வாக்குகள் நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார்.
அதில், நிராகரிக்கப்பட்ட 102 வாக்குகளில், சிலவற்றில் ஓட்டுச்சீட்டு இல்லையென்றும் சிலவற்றில் சான்றொப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முருகுமாறன் வெற்றியை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை வழக்கு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு