தேனி/ தஞ்சாவூர்: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மையப்பகுதியில் ஐயப்பன் கோயில் ஒன்று உள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சாமிக்கு மாலை அணித்து வழிபாடு செய்ய பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கோயிலுக்கு அருகில் உள்ள அபிஷேக பொருட்கள் கடைகளில் அர்ச்சனைக்காக துளசி மணிமாலை, கருங்காலி மாலை, சந்தன மாலை, ஜவ்வாது மாலை, காசி மணிமாலை போன்ற பல்வேறு மாலை ரகங்களும் வரிசையாக குவிக்கப்பட்டுள்ளன.
கேரளா சபரிமலையில் ஐயப்பன் மண்டல பூஜை இன்று தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு அருகில் உள்ள அபிஷேக பொருட்கள் கடைகளில் பிடித்தவாறு மாலைகளை தேர்ந்தெடுத்து, அதற்குரிய ஐயப்பன் டாலர்களை வாங்கி செல்கின்றனர். மேலும் மாலை அணிவதற்கு தேவையான பூஜை பொருள்கள், கருப்பு வேஷ்டி மற்றும் காவிநிற வேட்டிகள் மற்றும் பச்சை நிற வேட்டிகள் அதற்குரிய நிறங்களில் அமைந்துள்ள சட்டைகள் போன்றவற்றையும் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது.. 12 ராசிகளின் ராசிபலன்!
குறிப்பாக இளைஞர்களும், கல்லூரி பயிலும் மாணவர்களும் ஆர்வத்துடன் மாலைகளை வாங்கி செல்வதை காண முடிகிறது. கார்த்திகை துவங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக 130 ரூபாய்க்கு விற்ற பூ மாலை தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் கும்பகோணம் யானையடி அய்யனார் திருக்கோயிலில் இன்று காலை முதல் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரையான ஐய்யப்ப பக்தர்கள் நீராடி, காவியுடை அணிந்து பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் சுவாமிகளுக்கு தாங்கள் அணிந்து கொள்ளும் மாலையை வைத்து அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
பின் சரண கோஷம் முழங்க, சிவாச்சாரியார் மற்றும் குருசாமி திருக்கரங்களால் சுவாமி சன்னதி முன்பு மண்டியிட்டபடி ஐய்யப்பன் டாலர் கொண்ட துளசி மற்றும் சந்தன மாலைகளை அணிந்து சபரியாத்திரை சென்று அய்யப்பனை தரிசிக்க முறைப்படி விரதத்தை தொடங்கினர். மேலும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கோயில்களில் ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்