சென்னை: அண்ணா பல்கலைக்கழக விவேகானந்த அரங்கில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு 2022-இல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப்பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன்.
திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளது. அவற்றை வைத்து நான் படித்து வருகிறேன். குறலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு பெரிய அர்த்தங்கள் அமைந்துள்ளன.
கோயம்புத்தூரில் திருக்குறள் மாநாட்டை முதல்முறையாக தொடங்கிவைத்தேன். தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் தொடங்கிவைத்துள்ளேன். திருக்குறள் நூலை பல்வேறு நபர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இதன்மூலம் திருக்குறள் அர்த்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
திருக்குறள் நூல் பக்தியுடன் தொடங்கி, ஐந்து புலன்களை எப்படிக் கட்டுப்படுத்துவது, அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இறப்பு வரை எப்படி வாழ முடியும் என்பது குறித்து பேசுவதாகவும், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறளை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் கூறி வருகின்றனர். ஆனால் இந்த புத்தகம் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆணி வேர் என்பதை யாரும் பேசவில்லை. இந்தப் பிரச்னை வெள்ளையர்கள் காலத்தில் தொடங்கியது.
குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U. போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் G.U. போப் இதற்கான அர்த்தத்தைபுரிந்து இருந்தாலும் Primal Deity என எழுதியுள்ளார்.
திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நிதி சாஸ்திரம் குறித்து இந்த திருக்குறள் பேசுகிறது. ஆனால், இந்தப் புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர் என்பது, இந்தப் புத்தகத்தை முழுமையாகப் புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.
இந்தியா வளர்ந்து கொண்டுள்ளது, இந்தியா வரும் 2047ஆம் ஆண்டு உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக்கூடாது, நாடும் வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும்.
திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வந்தே தீர வேண்டும். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்தேன். ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புத்தகங்கள் பேசவில்லை. எனவே திருக்குறள் புத்தகத்தை முழுமையாக மொழி பெயர்க்க வேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!