சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து 37 வாகன ஆர்சி புத்தகங்கள் மாயமாகியுள்ளது. அதேநேரம் இது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி, போக்குவரத்து ஆணையரிடம் புகாராகச் சென்றுள்ளது. இதனையடுத்து உடனடியாக போக்குவரத்து ஆணையர் தலைமையில் அலுவலர்கள், ஆர்டிஓ விசாரணை நடத்தியதில், ஆர்சி புத்தகங்கள் மாயமானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமி காந்த் காளத்தி, ஆர்டிஓ உதவியாளர், இளநிலை உதவியாளர் இருவர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், தாம்பரம் காவல் நிலையத்தில் காண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி, கிளர்க் தாமோதரன், எழுத்தர் சாந்தி, மற்றும் வெளிநபர் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தும் 37 ஆர்சி புத்தகங்களை கண்டுபிடித்து தரவும் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆர்சி புத்தகம் காணாமல் போனதை என்னிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். அது அலுவலர்களுக்கு தெரிந்ததும் நடவடிக்கை எடுத்து விட்டனர்.
ஆர்சி புத்தகம் தொலைந்துபோன 37 பேருக்கும் புதிதாக ஆர்சி புத்தகம் வழங்கப்பட்டது. அதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மேலும் பழைய ஆர்சி புத்தகம் காலாவதியாகிவிடும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் டிஜிபியின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி.. காவல்துறை எச்சரிக்கை