சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தொழில் மாநாட்டினை ஏற்படுத்தி பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வருகின்ற 4ஆம் தேதி தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறப்பம்சமாக, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 60 முக்கிய ஒப்பந்தங்கள் பெரு நிறுவனங்களுடன் போடப்படவுள்ளன.
61 திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழ்நாடு என ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், “திமுக ஆட்சி பொறுப்பேற்ற கரோனா காலத்திலும், மற்ற மாநிலங்களில் தொழில் வளர்ச்சி இல்லாத நேரத்திலும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கரோனா காலகட்டத்திலும் 17 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டாளர்களை கொண்டு வந்தோம். தொழில் தொடங்க மிக ஏதுவான இடமாக தமிழ்நாடு கடந்தாண்டு 14ஆவது இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டில் 94 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” எனப் பதில் அளித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு மாற்றாக வேறுவேலைவாய்ப்பு: சென்னையில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டாவது விமான நிலையம் குறித்த கேள்விக்கு, “ஒன்றிய அரசு நான்கு இடங்களைத் தேர்வு செய்துள்ளது. கூடிய விரைவில் தேர்வு செய்யப்படும் இடம் குறித்து தகுந்த ஆலோசனைப்பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரிய இடத்திற்கான முடிவை வெளியிடுவார்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைய இருக்கிறது. அந்த இரண்டு மாவட்டங்களில் லித்தியம் பேட்டரி, பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மூலம், இணைப்புப் பாலமாக "நான் முதல்வன்" என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு தொழில் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை மூடபட்டதால் வேலை இழப்பதாக மாவட்டத்திலுள்ள சில மக்கள் கூறுவதாகத் தெரிய வருகிறது. ஆனால் முதலீடு மாநாடு ஈர்ப்பில்
8ஆயிரம் கோடி ரூபாயில் புதிய முதலீடு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறது. அதில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
இதையும் படிங்க: 14 தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்!