கரோனா வைரஸின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். ஏப்ரல் 20ஆம் தேதி (இன்று) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று கூறிய பிரதமர், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால் மத்திய அரசு அறிவித்தபடி ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும். ஆனால் அதில் எந்த தளர்வும் அறிவிக்கப்படாது.
மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளைத் தவிர வேறு எதற்கும் விதிவிலக்கு அளிக்கப்படாது. தற்போதைய நிலையே தொடரும். ஒருவேளை நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று நிலைமைக்கு ஏற்றார்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சுங்கக் கட்டணம் வசூலிப்பதை விலக்கிக்கொள்ள வேண்டும்' - வைகோ