சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்படும் வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, அதற்கான தொகையைச் செலுத்தினால், இயந்திரத்தில் இருந்து மதுபானத்தை பெற்றுக் கொள்ளலாம். 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.
இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் தானியங்கி மதுபான இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில் தமிழக அரசு செயல்படுவது போன்று சில செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவது வருத்தமளிக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். 29% நாடாளுமன்ற வருகைப் பதிவு கொண்டவரும், நாடாளுமன்றத்திற்கு போகாதவரும் (அன்புமணி) இது குறித்து செய்தி வெளியிடுகிறார். இந்த கடை எங்கு உள்ளது? அது எப்படி செயல்படுகிறது? என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
2019-ல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் இக்கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதைப் பயன்படுத்துகிறார்கள். அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டியது தானே. அதற்கு தைரியமில்லை. ஆனால், இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள்.
சென்ற அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட மக்களுக்கு இடையூறாக இருந்த 96 மதுக்கடைகள் திமுக ஆட்சியில் மூடப்பட்டுள்ளன. சட்டசபையில் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உண்மைக்கு மாறாக செய்திகள் பரப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இல்லை.
கரோனா காலத்தில் பெங்களூருவில் மதுக்கடைகளை ஒரு நாள் கூட மூடவில்லை. கடந்த ஆட்சியில் மதுக் கடைகளால் வந்த வருமானத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தவில்லையா? கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Koovagam: விமர்சையாக நடந்த கூவாகம் சித்திரை திருவிழா.. திருநங்கைகள் உற்சாக நடனம்!