சென்னை: மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மாமன்ற மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின் போது பேசிய 35 ஆவது வார்டு உறுப்பினர் ஜீவன், 2019 ஆம் ஆண்டு "அழைத்தால் இணைப்பு" திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஏழை எளிய மக்களுக்காக கழிவு நீர் இணைப்பு கொடுக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் இடைத்தரர்கள் தான் லாபம் பெறுகின்றனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், இந்த திட்டத்தின் படி கழிவுநீர் இணைப்புக்காக விண்ணப்பித்தால் 15 நாட்களில் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால்,இடைத்தரகர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் குடிநீர் வழங்கல் வாரியத்திடம் இருந்து இரண்டு நாட்களுக்கு உள்ளாக இணைப்பு வழங்கப்படுகிறது. திட்டம் இப்படியே போனால் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை எப்படி காண முடியும்? என்று விமர்சித்தார்.
நற்பெயரோ கெட்ட பெயரோ அதனை வாங்கி தருவது அதிகாரிகள் தான் இதனை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால்,ஏழை எளிய மக்களுக்கு இணைப்பு வழங்கப்படுவதில்லை, இதனை கேட்டால், உறுப்பினருக்கு அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார்.
அதனுடன், கழிவுநீர் இணைப்பு வழங்க சாலை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உடைக்கப்படுகிறது. மாநகராட்சி போடும் சாலைகளை உடைக்கும் போது சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கவனத்திற்கு ஏன் கொண்டு வரக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு வாசிகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அவர்களது கழிவு நீரை கால்வாயில் விடுகின்றனர் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் சிவமுருகன், மாமன்ற உறுப்பினர் கூறியது போல ஏழை எளிய மக்கள் குடிநீர் கழிவுநீர் இணைப்புகளை எந்தவித இடையூறும் இன்றி எளிதில் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அழைத்தால் இணைப்பு.
அவர் கூறிய சிக்கல்களைக் கலைந்து, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனரிடம் இது குறித்து எடுத்துரைத்து எடுக்கப்படும் நடவடிக்கையின் பதில் அடுத்த மாமன்ற கூட்டத்திற்குள் ஆணையரிடம் சமர்ப்பிக்க படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்களை மூட வேண்டும்" - மேயர் பிரியா பதில் என்ன?