சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, ’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண மதுவிலக்கு படிப்படியாகக் கொண்டு வரப்படும் என்று அறிவித்து 500 கடைகளை மூடியதாகவும், அதே போல நேரம் மாற்றம் செய்யப்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமி 500 கடைகளை மூடியதாகவும்’ தெரிவித்தார். ஆனால், தற்போது புதிய கடைகள் திறக்கப்படுவதாகவும், பார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு தங்கமணி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021 திமுக தேர்தல் அறிக்கையில் எங்கும் பூரண மதுவிலக்கு குறித்து தெரிவிக்கவில்லையென்றும், தமிழ்நாட்டில் 5350 டாஸ்மாக் இருப்பதாகவும்; புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்படும் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார்.