”கடந்த 5 ஆண்டுகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” மாநிலங்களவையில் ஒன்றிய சமூக நீதி இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறிய வார்த்தைகள் இவை.
அதேசமயம், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது கடந்த 30 ஆண்டுகளில் 941 பேர்வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்று 213 மரணங்கள் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஒன்றிய இணையமைச்சர் மாநிலங்களவையில் கூறியதில் உண்மை இருக்கிறதா என்பதை அறிய ஈடிவி பாரத் களத்தில் இறங்கியது. சென்னையில் இன்னும் கைகளால் மலம் அள்ளும் நடைமுறை இருப்பதாக சென்னை மாநராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் கூறுகிறார்.
மேலும் பேசிய அவர், ”குறுகிய சாலைகளிலும், குடிசை பகுதிகளிலும் கழிவுநீர் வாகனம் வரமுடியாத இடங்களில் இரவு நேரங்களில் ட்ரில்லர் வடிவிலான இயந்திரம் மூலம் கைகளால்தான் அள்ளப்படுகிறது. இது அலுவலர்களுக்கும் தெரியும்.
நகரமயமாதலால் சென்னையின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தாலும் இதுவரை நகரின் கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் வீடுகளிலும், தெருக்களிலும் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
அதேபோல், உணவகங்களிலும், பெரிய கடைகளிலும், நிறுவனங்களிலும், வீடுகளிலும் உள்ள கழிவுநீர் தொட்டிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலை நேரத்துக்கு பின் வந்து தூய்மைப்படுத்துகிறார்கள்.
அரசு சிறிய கட்டணம் பெற்றுக்கொண்டு தனியார் இடங்களிலும் கழிவுநீர் தொட்டியைத் தூய்மைப்படுத்தினால் இந்த அவல நிலை நீங்கும்” என்றார்.
மூச்சை அடக்கி சுத்தம் செய்வோம்
புருஷோத்தமனுடனான சந்திப்பை முடித்துவிட்டு தமிழ்நாட்டில் கைகளால் மலத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருக்கும் தொழிலாளர் தேவசகாயம் என்பவரை சந்தித்தோம். நம்மிடம் பேசிய அவர், "சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினேன்.
கடந்த ஜனவரி மாதம் முதல் என்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டனர். இதனால் வீடுகளிலும், கடைகளிலும் கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்துகிறேன்.
முதலில் ட்ரில்லர் வடிவிலான இயந்திரம் மூலம் கைகளால் தூய்மைப்படுத்துவோம். அதில் சீரடையவில்லை என்றால் உள்ளே இறங்கி மூச்சை அடக்கி அடைப்பை சரி செய்வோம். வருவாய் இல்லாததால் உயிரைப் பணையம் வைத்தே வேலை பார்க்க வேண்டியுள்ளது. அரசு எனது ஒப்பந்தப் பணியை மீண்டும் வழங்கினால் போதும் மனிதக் கழிவை அகற்றும் தொழிலில் ஈடுபட மாட்டேன்.
குழந்தைகள் அருகில் வரமாட்டார்கள்
குடும்பத்தைக் காப்பாற்ற இதுபோன்ற தூய்மைப் பணியை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றால் குழந்தைகளே அருகில் வராமல் இருப்பார்கள். துர்நாற்றம் வீசும் என்பதால் நானும் ஒதுங்கியே இருப்பேன்.
நிலைமையை புரிந்துகொண்டாலும் குழந்தைகள் அருகில் செல்ல முடியாதது வேதனை அளிக்கிறது" என்று அவர் கூறுகையில், அவரை இந்த அவல நிலையில் விட்டிருக்கும் அதிகார அமைப்பிலிருந்து நாற்றம் வீசியது.
3 மாதங்களுக்கு முன் மரணம்
கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சிங்கார சென்னையின் முக்கியப் பகுதியில், தமிழ்நாட்டின் அதிகார மையமாக விளங்கும் புனித ஜார்க் கோட்டைக்கு அருகேயுள்ள சத்தியா நகர் பகுதியில் வசிக்கும் இருவர் கழிவுநீர் தொட்டிக்கு உள்ளே இறங்கி அகற்றும்போது உயிரிழந்தனர்.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசனே அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபோன்ற நிலையில் ஒன்றிய அரசு மனித கழிவுகளை கைகளால் அகற்றுவதால் எந்த மரணமும் ஏற்படவில்லை எனக் கூறுவது அப்பட்டமான பொய்.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கால்வாசி நபர்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
மனிதக் கழிவை கைகளால் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
எது கௌரவம்
தற்போதைய ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து கூறிய நிலையில், தேவசகாயத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக முதல் கடமையாக இச்சமூக இழிவுக்கு முடிவு கட்ட வேண்டும்.
இந்தப் பணியால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதைவிட இந்தப் பணியை நாட்டில் ஒருவர்கூட செய்யவில்லை என்று கூறுவதுதான் ஒரு அரசின் கௌரவம் என்பதை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.