பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கல்வி அலுவலருக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி அன்று அனைத்து பணியிடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் விரும்பிய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஆசிரியர்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதுபோன்ற நடத்தப்பட்டாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர்களுடன் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயம் மாறுதல் வழங்கப்படும் என்பது உண்மையில்லை.
வட மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விரும்பினால் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நவம்பரில் பள்ளிகள் திறப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!