தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் இன்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கரு.நாகராஜன் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் வருகிற 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை வெற்றிவேல் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடத்த உள்ளோம்.
இந்த யாத்திரையை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை ஏற்கெனவே தமிழ்நாடு டிஜிபியிடம் பாஜக சார்பாக வழங்கி உள்ளோம். சென்னையில் வெற்றிவேல் யாத்திரையை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை காவல் ஆணையரிடம் அளித்துள்ளோம். திருத்தணியில் யாத்திரை தொடங்க உள்ளோம். சென்னையில் சுமார் 6 இடங்களில் வேல் யாத்திரை நடத்துகின்றோம்.
மாற்றத்திற்கான யாத்திரையாக இதை கருதலாம். கரோனா என்பதால் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு காவல்துறை தடை விதிக்க வாய்ப்பில்லை" என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு நாள் கொண்டாட அனுமதி மறுப்பு; பாஜக வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதியா? - கொளத்தூர் மணி கேள்வி