சென்னை: தமிழ்நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி நதி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது கிடையாது. பல ஆண்டுகள் காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில பிரிதிநிதிகளும் பேசி பார்த்து, எந்தவித பயனுமில்லை என்பதால் தான், நடுவன் மன்றத்தை நாடினோம்.
இனி பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடமில்லை. காவிரி நதி நீர் விவகாரத்தில் இனி உச்ச நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும். உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் பெற கோரி தமிழ்நாடு அரசு சார்பாக ஆக்கப்பூர்வமான வாதங்களை சட்டரீதியாக முன்வைக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர், "காவிரி நதிநீர் விவகாரத்தில் இரு மாநில பேச்சுவார்த்தையோ, பிரதமர் தலையிடலோ இனி தேவையில்லை. உச்ச நீதிமன்ற வழக்கிற்கு பிறகு தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் வருமான வரித்துறை சோதனை; 2 பேர் காசோலையுடன் வந்ததால் பரபரப்பு!
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் கோரி மத்திய அமைச்சரை சந்தித்ததை போல், கர்நாடக முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து சந்தர்ப்ப சூழநிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் எனவும், தேவை ஏற்படின் அவர் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திப்பார் எனவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக - பாஜக கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு, தனக்கு எதுவும் தெரியாது என்றார் தமிழக் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
இதையும் படிங்க: சென்னையில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!