சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் இன்று முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாரயணபாபு, முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் சுகாதாரத்துறை செயலரும் மலர் கொடுத்து வரவேற்றனர். மேலும், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் சிறப்பு பரிசாக ஸ்டெத்தெஸ்கோப் வழங்கி வரவேற்றார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், "மருத்துவ மாணவர்கள் முதலாம் ஆண்டில் கற்பிக்கப்படும் உடற்கூறு இயல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை நன்றாக கற்க வேண்டும். பாடத்திட்டத்துடன் இணைந்து அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது சில நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அவற்றிற்கான தடுப்பூசிகளைக் கண்டறிய மாணவர்கள் நன்கு படித்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். ஓமந்தூரார் கல்லூரியில் 7 மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் இணைந்துள்ளனர்.
கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை மேற்கொள்ளாதவர்களுக்காக இங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் எந்தவித நோய் தொற்றும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 908 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒன்பதாயிரத்து 446 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்காக 4.8 லட்சம் மருத்துவத் துறையை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என ஏழு லட்சம் பேர் நேற்றுவரை பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தடுப்பூசி பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் மருத்துவர்கள் பண்டிகை என்றும் பாராமால் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. அடுத்த கட்டமாக அவை பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. முதியவர்களுக்கு மூன்றாம் கட்டமாக செலுத்த உள்ளோம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமாராஜுக்கு முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.