சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அலெக்ஸ் பாண்டியன். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான கோம்பை புதுப்பட்டியில் உள்ள இடத்தில் ஆட்டு கிடை போட்டுள்ளார். அப்போது, அந்த தோட்டத்தின் அருகில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இந்த சிறுத்தை இறந்த விவகாரத்தில் அலெக்ஸ் பாண்டியனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, விசாரணை என்ற பெயரில் உதவி வன காப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், தேனி வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் ஆனந்த பிரபு உள்பட 4 வனக் காவலர்கள் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக அலெக்ஸ் பாண்டியன் குற்றம் சாட்டினார்.
தேனி மாவட்ட உதவி வன காப்பாளர் மகேந்திரனை சிறுத்தை தாக்கி உள்ளது என்றும், இதனால் தோட்டத்தில் உள்ளவர்களும் சேர்ந்து சிறுத்தையை அடித்துக் கொன்று விட்டதாகவும் அலெக்ஸ் பாண்டியன் கூறுகிறார். மேலும் தன் மீது பொய்யான குற்றம் சாட்டி வழக்கு பதிந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அலெக்ஸ் பாண்டியன், வனச்சரகத்தினர் வழக்கை உண்மையாக விசாரிக்காததால், இந்த வழக்கை தேனி வனத்துறையிடமிருந்து மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி தரப்பில் அவரது உறவினர் ஒருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி ஆடியோ வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அலெக்ஸ் பாண்டியன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி பலியான சிறுத்தை ; ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் விதி மீறலா...?