சென்னையிலுள்ள மதுரவாயல், எம்எம்டிஏ காலனி பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் ஏடிஎம் மையத்தின் காவலாளி வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். மையத்திற்குள் ஒருவர் பணம் எடுத்து கொண்டிருந்தபோது, ஆட்டோவில் பையுடன் வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனக்கூறி, மையத்திற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டிருந்தவர், ஓரமாக நின்று கொண்டிருந்தார். கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறிய நபர், ஏடிஎம் இயந்திரத்தில் சாவியைப் போட்டு, அதிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றார். இதனையடுத்து அருகிலிருந்த நபர் காவலாளியிடம் வந்த நபர், பை நிறையப் பணம் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக, வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர், ஏடிஎம் அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வரும் சந்தேகத்திற்குரிய நபர், லாவகமாக சாவி ஒன்றை போட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
தற்போது, இந்தக் காட்சிகளைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை திருடிச்சென்ற சந்தேகத்திற்குரிய நபர் யார் என்பது குறித்து, தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், ஏடிஎம் மையத்திற்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனக் கூறி, பணத்தை சந்தேகத்திற்குரிய நபர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் ரயில் மூலம் செல்ல ஈ-பாஸ் கட்டாயம் தேவை' - தென்னக ரயில்வே அறிவிப்பு