சென்னை: குரோம்பேட்டை சாஸ்திரி காலனி முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கும், மகள்கள் இருவரும் கல்லூரி சென்றுவிட்ட பின்பு பகல் நேரத்தில் வீட்டில் பாஸ்கரன் தாய் மூதாட்டி சகுந்தலா (70), மட்டும் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில் சகுந்தலா வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை நோக்கமிட்ட மர்மநபர்கள் அந்த நேரத்தை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் படுக்கை அறைக்கு சென்று பீரோவின் லாக்கரை உடைத்து அதில் இருந்த 11 சவரன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல மாடியிலிருந்து இறங்கி வந்துள்ளனர்.
அப்போது கல்லூரிக்கு சென்ற மகளை அவரது தாய் இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் மர்ம நபர்கள் இருவர் இருப்பதை பார்த்ததும் சத்தம் போட்டு உள்ளார். இதனால் திருட வந்த இருவரும் பதறியடித்துகொண்டு வீட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்து உள்ளனர்.
இதில் ஒருவர் மட்டும் வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்கு தப்பியோடி விட்ட நிலையில் மற்றொரு நபரை அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்துள்ளனர். பின்னர் இது குறித்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கிண்டி மடுவன்கரை பகுதியைச் சேர்ந்த தனமூர்த்தி (23) என்பது தெரியவந்தது.
மேலும் பாஸ்கர் வீட்டில் திருடிய 11 சவரன் தங்க நகைகளையும் தன்னுடன் வந்த ஆனந்த் என்ற மற்றொரு நபர் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும், தன்னிடம் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குரோம்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 11 சவரன் தங்க நகை உடன் தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர் பகுதியில் பகல் நேரத்தில் வீடுபுகுந்த நடத்தப்பட்ட இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நகைக்காக முதியவர் கொலை - கைரேகை மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது!