கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்கள் மூடப்பட்டது. கரோனா வைரஸ் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் குறைய தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு கட்டுபாடுகளுடன் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.
இதனையடுத்து எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் (நவம்பர் 10) திரையரங்குகளை திறக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசு அனுமதியளித்துள்ளது.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்கின் உள்ளே வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உடல் வெப்பநிலை சீராக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். முக்கியமாக 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காட்சி முடிந்து மற்றொரு காட்சி தொடங்கும் முன் கிருமிநாசினி கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மைலாப்பூரில் உள்ள சத்தியம் சினிமாஸ் (Pvr) காலை 11 மணி காட்சிக்கு மக்கள் ஆர்வத்துடன் படங்களை பார்ப்பதற்கு வந்தனர்.
அவர்கள் உள்ளே வருவதற்கு முன்னர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யதும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. டிக்கெட் QR ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிவிஆர் இயக்குநர் (தெற்கு) ஸ்வரூப் ரெட்டி கூறுகையில், "அடிக்கடி திரையரங்குகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறோம். திரையரங்கு வருவதற்கு முன்பாக மக்களுக்கு உடல் வெப்பமானி பரிசோதனை செய்யப்படுகிறது.
சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு தரையில் ஆறு அடிக்கு ஒரு வட்டம் போட்டு அதில் மக்களை நிறுத்தி சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம்.
ஒரு காட்சி முடிந்து மற்றொரு காட்சி ஆரம்பிக்கும் முன்இருக்கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. கழிப்பறையில் சமூக இடைவெளி பயன்படுத்துவதாகவும் அடிக்கடி சுத்தம் செய்யும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என திரையரங்கு ரசிகர் சுஜித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "வீட்டில் ஓடிடி தளத்தில் திரைப்படம் பார்த்தாலும் தியேட்டரில் பார்ப்பது போல் இல்லை. பார்த்த படத்தையே தியேட்டரில் பார்த்தால் அது ஒரு தனி மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது சூழ்நிலையில் கூட்டம் இல்லாமல் பார்ப்பது ஒரு கடினம்.
இருப்பினும் பல நாட்களாக திறக்கப்படாமல் திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் அதுவே மகிழ்ச்சியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் படங்களின் வெளியீடு தவிர்த்து சிறிது காலம் பொறுத்திருந்து திரையரங்கில் வெளியிட்டிருக்கலாம். தற்போது சூழ்நிலையில் திரையரங்குகளில் வந்து படம் பார்ப்பது பாதுகாப்பாகத்தான் உணருகிறோம்" என்று கூறினார்.