சென்னை: கொடுங்கையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(53). கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு பயணியை ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் சேர்த்திருக்கிறார். அப்போது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனினும் சமாளித்தபடி திருவான்மியூரில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நெஞ்சு வலி தாங்க முடியாததால் யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் வழியில் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தி விட்டு நேரடியாக போக்குவரத்து காவல் நிலையத்தில் வலி தாங்க முடியாமல் தன்னை காப்பாற்றுமாறு கூறிவிட்டு படுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சுரேஷ்குமாரின் நிலைமையை பார்த்த பின்பு உடனடியாக சுதாரித்து அந்த வழியாக வந்த 108 ஆம்பூலன்சை நிறுத்தி வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்கிற அனைத்து சாலைகளையும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். அதே போல அனைத்து சிக்னல்களும் பச்சை விளக்கு எரியும் படி போக்குவரத்து போலீசார் மைக் மூலமாக தகவல் கொடுத்தனர்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவர் சோதித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. சரியான நேரத்தில் போக்குவரத்து போலீசார் செய்த உதவி காரணமாகவே ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமார் காப்பாற்றப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் முன்பாக முதல் முறை சுரேஷ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் போது போக்குவரத்து போலீசார் மேற்கொள்ளும் யுக்தியை உயிருக்கு போராடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவரை காப்பாற்ற போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு குவிகிறது.
இதையும் படிங்க: ரு.10 கோடி மோசடி - முக்கிய நபரை உ.பி.யில் மடக்கிய சென்னை காவல்துறை