சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142-இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் ருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புத அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?” என கேள்வியும் எழுப்பியுள்ளார்.