சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தொண்டர்கள் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவியைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், "மதச்சார்பற்ற கூட்டணி மற்றும் மதச்சார்பாற்ற கட்சித்தலைவர்கள் மற்றும் திமுக நாடாளுமன்றக்குழுத்தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் ஆளுநரை திரும்பப் பெற அறிக்கையினை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்படி தான் ஆளுநர் நடக்க வேண்டும் என்பது தான் சட்டம்.
நாட்டிற்கு பிரதிபலன்கள் இல்லாமல், சட்டத்தினை மதிக்காமல், நாட்டின் எண்ணங்களுக்கு எதிராக இருக்கிறது ஆளுநரின் நடவடிக்கை. இந்திய நாட்டின் பிரதமரை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி என்னும் அனைவருக்குமான ஆட்சியினை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் மீறிப் பேசுகிறார்.
அரசியலமைப்புச்சட்டத்தை மீறி நாகலாந்தில் பேசினாரா ஆளுநர்?. அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் இயங்க விதிக்கும் தடையை எந்த சக்தியாக இருந்தாலும் அதைத் தகர்க்க வேண்டும். ஆளுநராகவே இருந்தாலும் அதைத் தகர்க்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த இந்தப்போராட்டம் அடித்தளமாக அமையும்" எனத்தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், "ஆளுநரை திரும்பப் பெற வேண்டிய கோரிக்கையே ஆளுநருக்கு அழகு அல்ல, விவாதத்திற்கு மேம்பட்டவராக ஆளுநர் இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் தனக்கான சட்ட உரிமையை மீறி இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டமுன் முடிவுகளை உடனுக்குடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்.
'வேந்தர்' என்கிற முறையில் பல்கலைக்கழகங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். தனது சித்தாந்தங்களை வெளியிடுவதற்கு ஆளுநர் பொறுப்பை அவர் பயன்படுத்திக்கொள்கிறார். சனாதான கூட்டங்களுக்கு இடம் கொடுக்கிற இடமாக ஆளுநர் மாளிகையை அவர் மாற்றியுள்ளார்.
அரசுக்கு எதிராக பேச எந்த ஆளுநருக்கும் உரிமையில்லை. நீதிபதியாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் உண்மையானவர்களாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக விளங்க வேண்டும்.
ஆனால், ஆளுநர் ரவி தங்களுக்கு எதிரான கருத்தைச்சொல்கிறார் அல்லது அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிராகவே செயல்படுகிறார். அதனால் மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். ஆளுநர் ரவியை திரும்பப் பெறவில்லை என்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாடெங்கும் போராட்டம் நடைபெற வேண்டுமா" என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 10 % இட ஒதுக்கீடு தீர்ப்பு ... அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்க முடிவு