சென்னை: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை தாம்பரம் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2018 - 2019ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகளை, SEZ நிறுவனங்களுக்கும் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்கினார்.
மேலும், சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு 7 துறைகளின் கீழ் 25 வகையான ஏற்றுமதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கு 2018 - 19ஆம் ஆண்டிற்கான 138 விருதுகளை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும்.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில், அனைத்து மாநிலங்களும் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோதே, புதுச்சேரியில் 7 ரூபாய் அளவில் குறைக்கப்பட்டது.
இன்று மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளதால் இன்னும் அதிகமாக புதுச்சேரியில் பெட்ரொல், டீசல் விலையானது, அனைத்து மாநிலங்களையும்விட குறைவாகவே உள்ளது. மக்களுக்கான சுமையைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை ஏறும் போது பல விமர்சனங்களை முன் வைக்கின்றோம். மத்திய அரசுபோல் மாநில அரசும் வரியைக் குறைத்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பல்லக்கு தூக்கிய அண்ணாமலை - தடைகளை தாண்டி பல்லக்கில் வீதியுலா வந்த தருமபுரம் ஆதீனம்