தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு மையங்கள் அமைப்பது பற்றிய விதிமுறைகளை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கான தேர்வு மையங்கள் புதிதாக அமைப்பதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் அரசு தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு புதிய தேர்வு மையத்திற்கான கருத்துரு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு தேர்வு மையங்கள் புதிதாக அமைப்பதற்கு அனுப்பப்பட்டுள்ள பள்ளிகள் குறித்த விவரங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேர்வு மையம் அமைக்கவுள்ள பள்ளியை நேரில் ஆய்வு செய்தபின் அவசியம் தேர்வு மையமாக அமைக்க வேண்டியதற்கான காரணத்தை தெளிவாக விளக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பரிந்துரையின்றி பெறப்படும் புதிய தேர்வு மையங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் உரியகால கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்றும், அரசு விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையமாக்க வேண்டி அனுப்பபடும் விண்ணப்பத்தினை பரிந்துரை செய்யும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் இடநெருக்கடி காரணமாக கடந்த ஆண்டுகளில் துணைத் தேர்வு மையம் அமைத்து தேர்வு எழுதும் நிலை இருந்தது. அதுபோன்ற நிலை ஏற்படாதவாறு புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.